பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும், தமிழ் திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் விஷால். என்னதான் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் இவரின் ஆரம்பகால படங்களான செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்களின் மூலம் தன்னுடைய இயல்பான நடிப்பினால் எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார் விஷால்.
இந்நிலையில் தற்போது வெளியாகும் ஒரு சில படங்களில் நினைத்த அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்த படங்களில் விஷால் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் நடித்து வெளியான சக்ரா படத்தினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம், விஷாலின் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷால், ‘நீதியும் உண்மையும் எப்போதும் ஜெயிக்கும் என்றும் தன் மீது போடப்பட்ட பொய்யான வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கின் மூலம் தனக்கு துன்பத்தை விளைவித்த லைக்கா நிறுவனத்திற்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து, அதை தன்னிடம் வழங்கும்படி பரபரப்பான தீர்ப்பை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்’ என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் நீண்ட நாட்களாக இந்த வழக்கை பற்றிய பல்வேறு விமர்சனங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த பிரச்சினைக்கு ஒருவழியாய் முடிவு கிடைத்துவிட்டது.