நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துவருவது நாமறிந்த செய்தி தான். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில, இறுதிக்கட்ட சண்டை காட்சியை ரஷ்யாவில் படமாக்கப் போகிறார்களாம்.
இப்படத்தை முடித்தபின் அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. தற்போது அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கப்போவதாக ஒருபக்கம் தகவல் வருகின்றது.
விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே இப்படத்தை தயாரிக்க போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப்போவதாக தற்போது புதிய தகவல் வந்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தை சந்தித்தது பற்றி பேசிய ஜிப்ரான், ‘அஜித்தை நான் சந்தித்தது ஒரு ரசிகனின் சந்திப்பை போன்றது. நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என அவர் கூறியது என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது’ என்றார்.
தற்போது தல 61 படத்தில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுபற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.