சினிமா என்றாலே போதையான உலகம் தான் என்று ஆகிவிட்டது. நடிகர்கள் முதல் நடிகைகள் வரை அனைவருமே இரவு பார்ட்டிகளில் போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு கூட நடிகை ரம்யாகிருஷ்ணன் காரிலிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ல் போதைப்பொருள் வழக்கில் சில தெலுங்கு நடிகர், நடிகைகள் சிக்கினர். 2017ல் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தெலுங்கு நடிகர்கள் தருண், நவதீப், ரவிதேஜா, நடிகை சார்மி, முமைத்கான் இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்புடையதாக கருதப்பட்டது.
போதைப்பொருள் வழக்கில் 60 பேரிடம் விசாரணை செய்த காவல்துறை 30 பேரை கைதும் செய்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் பல கோடி ரூபாய் வரை கைமாறி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தற்போது 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நடிகர் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்னாத் மற்றும் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், முமைத்கான் ஆகியோரும் அடங்குவர்.
இதில் ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6, ராணா செப்டம்பர் 8, ரவிதேஜா செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர்கள் சாட்சிகளாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில தெலுங்கு சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங், ராணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் தெலுங்கு சினிமாவில் சிலர் சற்று கலக்கத்தில் உள்ளார்களாம். ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.