திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வரலாற்றை தவறாக சித்தரித்த தலைவி படம்.. கொந்தளித்த அரசியல் பிரபலங்கள்

வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படமாக எடுக்கும் பொழுது படத்தின் இயக்குனர் அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். அவர் எடுக்கும் படங்களில் ஏதேனும் ஒரு சிறிய இடத்தில் சிறிய செய்தியை தவறாக கூறி இருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விடும். எனவே இதுபோன்ற படங்களை கையாள்வது மிகவும் கடினமான விஷயமாகும். இருந்தும் இதுபோன்ற படங்களை எடுப்பதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் தலைவி. இப்படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், விமர்சகர்கள் சிலர் படத்தில் வரலாற்றை இயக்குனர் விஜய் தவறாக சித்தரித்து விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது கடந்த 1989ஆம் ஆண்டு சட்டசபையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசிக்க எழுகிறார். கருணாநிதி நிதிநிலை அறிக்கை வாசிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தகராறு செய்கிறார். மேலும் அதிமுகவினர் முதல்வர் கருணாநிதி கையில் இருக்கும் நிதிநிலை அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிகிறன்றனர்.

அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் தனது சேலையை இழுத்து மானபங்கம் செய்ததாக தலைவிரி கோலத்தில் சட்டசபைக்கு வெளியே வந்து ஜெயலலிதா புகார் செய்கிறார். அதை செய்தது துரைமுருகன் எனவும் கூறுகிறார். இதுதான் உண்மையில் நடந்த சம்பவம். ஆனால் படத்திலோ உண்மைக்கு மாறாக, கருணாநிதி அருகில் இருக்கும் துரைமுருகனாக கதாபாத்திரம் ஜெயலலிதாவிடம் எம்ஜிஆருக்கும், உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறது.

பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா முன்னோக்கிவர, துரைமுருகன் கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி சேலையை உருவுகிறது. இனிமேல் இந்த சட்டசபையில் முதல்வராகத்தான் நுழைவேன் என்று சபதம் செய்து வெளியேறும் ஜெயலலிதா தனது சபதத்தை எப்படி நிறைவேற்றினார் என்பது தலைவி படத்தின் கதை என்பதுபோல் சித்தரித்துள்ளனர்.

சட்டசபையில் நடந்த உண்மை சம்பவத்தை மறைத்து ஜெயலலிதாவிற்கும் எம்ஜிஆருக்கும் என்ன உறவு என்று கொச்சைப்படுத்தும் விதமாக கேட்பது போல் காட்சிப்படுத்தி இருப்பது மிகவும் தவறான செயலாகும் என விமர்சகர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

kangana as thalaivi

இதுவரை இதுபோன்ற வரலாற்று சம்பவங்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு சர்ச்சையை சந்தித்த தான் வெளிவந்துள்ளன. அதேபோன்று தற்போது தலைவி படமும் வரலாற்றை தவறாக சித்தரித்து உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Trending News