தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் ஆரம்பகாலங்களில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. அதன் பின்னரே இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்று வருகிறது. தற்போது அருண் விஜய் அவரது மாமாவும், பிரபல இயக்குனருமான ஹரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் அருண் விஜய் நடிப்பில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதுதவிர தனது வெற்றிப்பட இயக்குனருடன் அருண் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
அதாவது ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு நாயகியாக நடிகை ரெஜினா நடித்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பார்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பார்டர் படத்தை வெளியிட தடை கோரி டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.