90களில் கனவுக்கன்னியாக வலம்வந்த குஷ்பூ, தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டியதெல்லாம் எங்கும் நடந்திராத செயல். இவர் தனது மார்க்கெட் உச்சத்திலிருந்தபோதே 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார்.
சினிமா தவிர்த்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பிரபலம். சில பல சீரியல்களிலும் நடித்துள்ளார் குஷ்பூ. இவர் கருணாநிதி மீது இருந்த மரியாதை காரணமாகவும், திமுகவின் கொள்கை மீது இருந்த பற்று காரணமாகவும் 2010 ஆம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
பொதுவெளிகளில் மிகவும் ஆக்டிவாக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி காங்கிரஸ் நுழைந்தார். கருணாநிதிக்குப்பின் திமுகவின் அடுத்த தலைவர் யார் என இவர் பேசியது ஸ்டாலினை அதிருப்திக்குள்ளாக்கியது எனவும் அதனால்தான் இவர் திமுகவிலிருந்து வெளியேறினார் எனவும் கூறப்பட்டது.
காங்கிரசில் ஆரம்ப காலத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த இவர் ஒருகட்டத்திற்கு மேல் புறக்கணிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் கண்டார்.
தற்போது இவர் பாஜகவில் இருந்தாலும், சமீப காலமாக மிகவும் அமைதியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் எந்த கருத்தும் பதிவிடுவதில்லை. பாஜகவில் தனக்கு வழங்கப்பட்ட தேசியச் செய்திதொடர்பாளர் பதவியை கூட வேண்டாம் எனக் நிராகரித்துவிட்டார்.
இதனால் இவர் வேறு கட்சிக்கு மாறப்போகிறார் எனக்கூட பேச்சு அடிபட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அவர், திமுகவின் ஆட்சி, நடவடிக்கைகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்து வருகிறார். திமுக ஆட்சி அமைந்து சில மாதங்கள் தான் ஆகியிருக்கிறது.
முழுமையாக 6 மாதங்கள் முடிந்தபின்னே திமுகவின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயலும் என அவர் கூறினார்.