திரையுலகத்தின் மூலம் முதல்வர்கள் ஆன அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர் ஆச்சி மனோரமா.
ஆச்சி மனோரமா தன் 12வது வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். வைரம் நாடக சபாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த மனோரமா பின்னர் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை உடன் நான் கண்ட இந்து ராஜ்யம் என்ற மேடை நாடகத்தில் நடித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய உதயசூரியன் என்ற நாடகத்தில் கருணாநிதியுடன் இணைந்து மனோரமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அன்பே வா, படகோட்டி மற்றும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். செல்வி ஜெயலலிதாவுடன் கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர் மனோரமா. அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் அளவிற்கு உரிமை பெற்றவரும் கூட. ஆச்சி மனோரமா அவர்களின் இறப்பிற்கு உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் கூட ஜெயலலிதா வந்து அஞ்சலி செலுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தன்னைப் போலவே தனியாக இருந்து சாதித்த காரணத்தினால் வந்த அன்பு என்று ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இவர் மறைந்த தெலுங்கு முதல்வர் என்.டி.ஆர் உடன் லவகுசா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.