அக்கட தேசத்தில் அழகான நடிகையாக வலம் வந்த அவர் தமிழில் நம்பர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு தேசத்திற்கே மீண்டும் திரும்பினார்.
அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகைக்கு ஜாக்பாட் அடித்தது போல் கிடைத்தது அந்த திகில் பட வாய்ப்பு. அந்தப் படத்தில் நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பல இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் அடுத்தடுத்து புக் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் இளவரசியாக நடித்த அந்த வரலாற்றுத் திரைப்படம் உலகமெங்கும் சாதனை படைத்தது. அதில் நடிகையின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கிடையில் நடிகை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தன் உடல் எடையை ஏற்றி ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் நடிகையின் போதாத காலம் அந்த படத்திற்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். அதனால் அவருக்கு வர இருந்த படவாய்ப்புகளும் வெகுவாக குறைந்தது. இதனால் மனம் உடைந்த நடிகை எப்படியாவது உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கினார்.
கடந்த 6 மாதமாக நடிகை டயட், உடற்பயிற்சி, யோகா என்று பெரும் முயற்சி எடுத்து தற்போது தன் உடல் எடையை பழைய மாதிரி குறைத்து விட்டார். சினிமாவில் மீண்டும் அடுத்த ரவுண்ட் வருவதற்காக நடிகை தற்போது பலரிடம் கதைகளை கேட்டு வருகிறார்.
மீண்டும் வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் கொண்ட நடிகை இதுவரை பத்து கதைகளை கேட்டிருக்கிறாராம். நடிகை விரைவில் ஒரு கதையை தேர்வு செய்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.