தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜயகாந்த் அரசியலிலும் சிறப்பாக பணியாற்றினார்.
தற்போது கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் படத்தின் இறுதி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு புனித தோமையார் மலை தேவாலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நான் வியந்தேன், அது முற்றிலும் தவறான செய்தி. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடித்தால் கட்சியின் தலைமை குழு மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என பிரேமலதா கூறினார். இதனால் விஜயகாந்த் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கேப்டனை திரையில் பார்க்கலாம் என ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு இந்தச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.