தமிழ் சினிமாவில் குடும்ப சென்டிமென்ட் கதைகளை எடுப்பதில் மிகவும் திறமையானவர் இயக்குனர் சேரன். இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அவரின் இந்த முதல் திரைப்படமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களுக்காக நான்கு முறை தேசிய விருதை பெற்றார். அதிலும் அவருடைய சினிமா வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ஆட்டோகிராப். ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் இயக்குனர் சேரன் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வெவ்வேறு காலகட்டங்களில் ஹீரோவுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பிறகு சேரன் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பொழுது ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவில் இருப்பதாக அவர் அறிவித்தார்.
இதனால் அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அதன் பிறகு சேரன் மற்ற திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் ஆட்டோகிராப் திரைப்படத்திற்கான கதையை அவர் தற்போது எழுதி முடித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அவர் வெளியிட உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.