ஊடகங்கள் நினைத்தால் ஒரு நல்ல படத்தையும் தோல்வி அடையச் செய்யவும், தோல்வியை தழுவ வேண்டிய படங்களை வெற்றி பெற செய்ய முடியும். சில சமயங்களில் நல்ல படங்களுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் சினிமா விமர்சகர்கள் மூலம் ஊடகங்களால் மக்களுக்குச் சென்று அதன் பிறகு வெற்றி பெற்ற படங்களும் உண்டு. அவ்வாறு ஊடகங்கள் வாயிலாக வெற்றி பெற்ற படங்களை பார்க்கலாம்.
காதல் கோட்டை: அஜித், தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. பார்க்காமலே காதல் என்ற புதிய ட்ரெண்டை உருவாக்கியிருந்தார் இயக்குனர் அகத்தியன். இப்படத்திற்கு பெரிய அங்கீகாரம் முதலில் கிடைக்கவில்லை. பத்திரிக்கை உலகிலும், ஊடகங்களிலும் இப்படம் பற்றி பெரிதும் பேசப்படவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது.
ஒரு தலை ராகம்: தமிழ் சினிமாவில் டி ஆரின் முதல் படமான ஒரு தலை ராகம் படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே புதுமுகங்கள். ரசிகர்களுக்கு முதலில் இது பரிச்சயமில்லாத முகங்கள் என்பதால் ஒரு தலை ராகம் படத்திற்கு செல்ல தயங்கினார்கள். அதன்பிறகு ஊடகங்களில் இப்படத்திற்கான விமர்சனங்களை கேட்டு திரையரங்குகளுக்கு சென்றனர். அதன் பிறகு இப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.
சேது: பாலாவின் அறிமுகப் படமான சேது படத்தில் விக்ரம், அபிதா, சிவக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். முதலில் சேது படத்தை வாங்க தியேட்டர் உரிமையாளர்களை முன்வரவில்லை. அதன் பின் பல சவால்களுக்கு பின்பு இப்படம் வெளியான போதும் தியேட்டரில் மக்கள் கூட்டம் இல்லை. அதன்பின் படத்தைப் பார்த்தோரின் விமர்சனங்களால் மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு வந்தது. அதன்பிறகு சேது படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அழகி: தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் அழகி. காதல் காட்சிகளை இல்லாத காதல் படமாக அமைந்தது அழகி படம். திருமணமான பிறகு தன்னுடைய முன்னாள் காதலியின் அவல நிலையை புரிந்து கொண்டு அவருக்கு உதவுகிறார் பார்த்திபன். அழகி படம் ஊடகங்களின் விமர்சனங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றது. இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதும் பெற்றது.
சித்திரம் பேசுதடி: மிஸ்கின் இயக்கத்தில் நரேன், பாவனா நடிப்பில் வெளியான திரைப்படம் சித்திரம் பேசுதடி. இப்படம் பெரிய அளவில் விளம்பரங்களோ, ஆரவாரங்களும் இல்லாமல் வெளியானது. இப்படம் நல்ல கதை அம்சம் கொண்ட படமாக இருந்தாலும் முதல் வாரத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் பத்திரிகை விமர்சனங்களும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது.