பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பது இல்லை. அதிலும் வில்லன் வேடம் என்றால் எவ்வளவு பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும் முடியாது என்று ஒரேயடியாக மறுத்து விடுவார்கள். அந்த ஹீரோக்களுக்கு மத்தியில் சற்று வித்தியாசம் காட்டி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இருக்கும் அவர் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் அவருடன் சேர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்று ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தவர்.
அதன்பிறகு இவர் தமிழில் வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பின்னர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த புஷ்பா திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து இவருக்கு தற்போது வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் விக்ரம் படத்தை தொடர்ந்து அவர் இன்னும் இரண்டு படங்களில் வில்லனாக நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதனால் கேரளாவை அவர் கிட்டத்தட்ட மறந்து விட்டார் என்றே சொல்லலாம்.
ஏனென்றால் புஷ்பா படத்தின் டப்பிங் பேசுவதற்காக கேரளாவிலிருந்து வந்த அவர் திரும்ப அங்கு செல்லவே இல்லையாம். அதற்கு ஏற்றார்போல் விக்ரம் திரைப்படமும் ஜவ்வு போல நீண்டகாலம் இழுத்து விட்டது. இதனால் பாவம் மனுஷன் கேரளாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். எது எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஒரு அட்டகாசமான வில்லன் கிடைச்சாச்சு.