வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பக்கா கிராமத்தானாக மாறப்போகும் கமல்.. அதிரடியான கதையை ரெடி செய்த இயக்குனர்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுத்து தற்போது ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு கமல் அடுத்ததாக எந்த மாதிரியான ஒரு கதை களத்தில் நடிக்கப் போகிறார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கமல், இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முத்தையா தற்போது கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் விருமன் திரைப்படத்தை முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து அவர் கமலுக்காக ஒரு பக்காவான கிராமத்து கதையை தயார் செய்துள்ளார். கிராமத்து கதைகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் தருவதில் கில்லாடியான முத்தையாவின் இந்தக் கதை கமலுக்கு ரொம்பவும் பிடித்து விட்டதாம். அதனால் அவர் இந்த கதையில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கமலை அவருடைய ரசிகர்கள் அனைவரும் ஒரு அதிரடியான முரட்டு கிராமத்து ஆளாக திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விருமாண்டி திரைப்படத்திற்குப் பிறகு அவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கமல் மீண்டும் விருமாண்டி படத்தைப் போல ஒரு அதிரடியான கிராமத்து கதையில் நடிக்க தயாராகிவிட்டார்.

கமல் தற்போது அரசியல், நடிப்பு, சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என்று மூன்று குதிரைகளில் சவாரி செய்து வருகிறார். இதனால் அவருடைய நடிப்பில் திரைப்படங்கள் வெளியாவதற்கு நீண்ட கால தாமதம் ஆகிறது. அதனால்தான் கமல் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைக் கூட தொகுத்து வழங்காமல் விலகிவிட்டார்.

இதை வைத்து பார்க்கும் போது கமல், முத்தையா கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களின் பார்வைக்கு கூடிய விரைவில் கிடைக்கும் என்றே தெரிகிறது. மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார் என்பதும் அனைவருக்கும் சஸ்பென்சாக இருக்கிறது. ஒருவேளை ஹீரோயின் இல்லாமல் கமல் நடிப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News