தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் நடித்து அசத்தி விடுவார். சொல்லப்போனால் சில வரலாற்று கதாபாத்திரங்களுக்கு இவரால் மட்டும் தான் உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் அப்போது பலருக்கும் இருந்தது.
அவருக்குப் பிறகு அப்படிப்பட்ட பல கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர் கமல்ஹாசன். அதனால்தான் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்றும், ஆண்டவர் என்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கமல் இன்றுவரை தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத தூணாக இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தசாவதாரம் படத்தில் பத்து வித்தியாசமான வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த 10 கேரக்டர்களுக்கும் இவர் நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தன் குரலில் வித்தியாசத்தை காட்டி நடித்து இருப்பார்.
அவரைப் போலவே தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 மொழிகளை அசாத்தியமாக பேசக்கூடிய ஒரு ஜாம்பவானும் இருக்கிறார். ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று அனைவரும் பாராட்டும் வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் எம் எஸ் பாஸ்கர் தான் அது.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலின் மூலம் அதிக பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து இருக்கும் இவர் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார். இப்போது இவர் நடிக்காத திரைப்படங்களே இல்லை எனும் அளவுக்கு ரொம்ப பிசியான நடிகராக மாறியிருக்கிறார்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை கன கச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய இவரை தற்போது எல்லோரும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பல மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் கொண்ட இவர் இரும்புக்கோட்டை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு புது மொழியை கண்டுபிடித்து பேசி அசத்தியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் இவருக்கு அதிகமான தமிழ்ப்புலமையும் உண்டாம். இப்படி தனக்குள் பல்வேறு திறமைகளை கொண்டு சினிமாவில் கலக்கி வரும் இவரை இன்று தமிழ் சினிமாவே ஒரு மகா நடிகனாக பார்த்து வருகிறது.