நடிக்க வந்து ஏழு ஆண்டுகளில் 30 திரைப்படங்களை நடித்து சாதனை படைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்.
தொடர்ந்து மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இசையமைத்து பிரபலமடைந்த ஜி.வி பிரகாஷ், நடிக்கப்போவதாக அறிவித்தார். அப்போது பலரும் அவரது நடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதையும் பொருட்படுத்தாத ஜிவி பிரகாஷ் 2015ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சாம். சி.எஸ் இயக்கத்தில் டார்லிங் திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றார்.
மேலும், இவர் நடிப்பில் வெளியான பேச்சுலர், நாச்சியார், சர்வம் தாள மையம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்கள் பெருமளவில் பேசப்பட்டது.இதனிடையே 7 வருடத்தில் 30 திரைப்படங்களை நடித்து சாதனை படைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.மேலும் இவர் நடித்த பல திரைப்படங்களில் புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பொதுவாக வளர்ந்து வரும் நடிகர்கள் தரமான படம் கொடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி, ஏற்கனவே பல படங்கள் இயக்கிய இயக்குனர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஜிவி பிரகாஷ் அதற்கு மாற்றாக, பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களை தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அறிமுகப்படுத்தி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 1997 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூர்யா தற்போது 40 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ஜி.வி.பிரகாஷ் 7 வருடத்தில் 30 திரைப்படங்கள் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நடிப்பது மட்டுமில்லாமல் சமூக கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு ஊக்குவிக்கும் விளம்பரங்களில் கோடி ருபாய் கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் என ஜிவி பிரகாஷ் தைரியமாக தெரிவித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.