சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கல்யாணத்துக்கு பின் கிடைத்த புது ஆக்சிஜன்.. அறம் வரிசையில் நயன்தாராவுக்கு அடித்த லக்

நயன்தாரா கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். அதனால்தான் ஹீரோயின்கள் உடனே திருமணம் செய்து கொள்ள பயப்படுகிறார்கள்.

ஆனால் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கல்யாணத்துக்கு பின்புதான் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பல படங்களில் பிசியாக உள்ளார். மேலும் இப்போது பாலிவுட்டிலும் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாராவின் கல்யாணத்திற்கு பின் வெளியாகியிருக்கும் படம் தான் O2. சுவாசக் கோளாறு உள்ள தன் மகனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் பஸ்ஸில் பயணம் செய்யும் நயன்தாரா என்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதே O2 படத்தின் கதை.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் இப்படி ஒரு கதை களத்தை யாரும் சுவாரசியமாக கொடுத்ததில்லை. அதை அவ்வளவு அற்புதமாக கொடுத்துள்ளார் ஜிஎஸ் விக்னேஷ். இந்நிலையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அறம் படத்திற்கு பிறகு ரசிகர்கள் பாராட்டும் விதமாக நயன்தாராவின் O2 உள்ளது. அறம் படத்தில் ஒரு துணிச்சலான அதிகாரியாக நடித்த நயன்தாரா, இப்படத்தில் இளம் விதவையாக தன்னுடைய குழந்தையை காப்பாற்ற பொங்கி எழும் தாயாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையிலேயே O2 படம் ரசிகர்களை சில காட்சிகளில் நாற்காலியின் நுனிக்கே வரச் செய்தது. மேலும் ஹாலிவுட்டுக்கு நிகரான ஒரு கதைக்களத்தை எடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் என்று சொல்லலாம். கல்யாணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு இப்படி ஒரு பாராட்டு புது ஆக்சிஜனை கொடுத்துள்ளது.

Trending News