வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும். அந்தவகையில் பல பிரபலங்கள் வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை வாங்கியுள்ளனர். அதற்கான நுழைவு வரியை செலுத்தவில்லை என பல பிரபலங்களுக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியும் உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து 63 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ, எக்ஸ்5 காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்திருந்தார். ஆனால் அதற்கான நுழைவு வரியை விஜய் கட்டாததால் வணிக வரித்துறை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்காக விஜய் நீதிமன்றத்தை நாடிய போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காரர்களுக்கு நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்பிறகு 2019 இல் நீதிமன்றம் கொடுத்த தேதியில் காருக்கான 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரியை விஜய் செலுத்தியிருந்தார்.
ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் குறித்த நேரத்தில் வரியே செலுத்தாததால் அபராதமாக 30 லட்சத்து 20 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என 2021 இறுதியில் மீண்டும் வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் இதே கோரிக்கையுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். அதாவது விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்பு முழு வரியையும் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது.
அதுவே ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் எனவும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.