நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரின் சொத்து ஜப்தி செய்யப்பட இருக்கும் செய்தி தற்போது திரையுலகை அதிர வைத்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் குற்ற பரம்பரை என்ற திரைப்படம் வெளியானது.
அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக 76 ஆயிரத்து 122 ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத் தொகையை இத்தனை வருடங்கள் கழித்தும் சந்திரசேகர் திருப்பித் தரவில்லை என்று விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும் அந்த மனுவில் ஒப்பந்தம் போடப்பட்ட தொகையை சந்திரசேகர் வழங்கவில்லை என்றும், அந்த பணத்தை வாங்கி தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு விசாரணையில் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் டேபிள், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து வந்த ஆட்கள் சந்திரசேகரின் வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்வதற்கு முயன்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத சந்திரசேகர் காவல்துறையின் உதவி வேண்டும் என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரின் தந்தை 76 ஆயிரம் பணத்தை இத்தனை வருடங்கள் கடன் பாக்கி வைத்திருப்பது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விஷயத்தில் விஜய் உதவவில்லையா என்றும், என்னதான் பிரச்சனை இருந்தாலும் அப்பாவிற்கு ஒரு கஷ்டம் என்றால் அவர் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்த விவகாரத்தில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை காணவும் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.