எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கதைக்கு தேவை என்றால் வயதான தோற்றத்தில் கூட நடிக்க ஓகே சொல்வதால் அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
அந்த வகையில் அவர் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவையே மறக்கும் அளவுக்கு அவர் தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி முன்னணி இடத்தை பிடித்திருக்கும் விஜய் சேதுபதியை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு திரைப்படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த இப்படத்தில் காயத்ரி உட்பட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
எதார்த்தமான கதையும், இயல்பான நடிப்புமே இந்தப் படத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இத்தனைக்கும் இயக்குனர் லெனின் பாரதிக்கு இந்த திரைப்படம் தான் முதல் திரைப்படம். அறிமுக திரைப்படத்திலேயே இப்படி ஒரு தரமான வெற்றியை கொடுத்த பெருமையும் அவருக்கு உண்டு.
மேலும் இந்த திரைப்படம் நார்வே தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட் உள்ளிட்ட பல விருதுகளையும் தட்டிச் சென்றது. இப்படி பல சிறப்புகளை பெற்ற இந்த படத்திற்குப் பிறகு லெனின் பாரதி வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை என்பது தான் பலருக்கும் வியப்பாக இருக்கிறது.
ஒரு தரமான வெற்றி திரைப்படத்தை கொடுத்தும் இவருக்கு ஏன் அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவில்லை என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி கூட இவரை கண்டுகொள்ளாததன் காரணமும் யாருக்கும் தெரியவில்லை. இவர் மட்டுமல்லாமல் இவரைப் போன்று இன்னும் பல இயக்குனர்களும் திறமை இருந்தும் சினிமாவில் சாதிக்க முடியாமல் இருக்கின்றனர்.