சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக லைக்கா நிறுவனத்திற்கு இரண்டு படங்களும், தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கேமியோ ரோல் என்று பரபரப்பாக இருக்கிறார்.
அவரின் இவ்வளவு பிசியான நேரத்திலும் கூட திறமையான இயக்குனர்களையும், அவர்களின் படங்களையும் பாராட்ட அவர் தவறியதே கிடையாது. அந்த வகையில் சமீபத்தில் அவர் காந்தாரா பட இயக்குனர் ரிஷப் செட்டியை தன் வீட்டிற்கு அழைத்து மனமார பாராட்டினார்.
அது மட்டுமல்லாமல் அவருக்கு தங்க செயின் கொடுத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். அதை தொடர்ந்து தற்போது லவ் டுடே பட இயக்குனர் பிரதீப்பையும் ரஜினி தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது ரஜினி ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.
அரசியல் உட்பட பல விஷயங்களையும் அவர் அந்த படத்தில் கலாய்த்து இருப்பார். அதிலும் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதையும், இளம் வயது ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது பற்றியும் அவர் அந்தப் படத்தில் கலாய்த்து இருந்தார். அப்போது இது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியது. ஆனால் சூப்பர் ஸ்டார் இதைப்பற்றி பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில்தான் அவர் தன்னை கலாய்த்து இருந்தாலும் கூட பலரும் ரசிக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். இப்படி ஒரு மனசு யாருக்கு வரும் என்றும் சூப்பர் ஸ்டார் பெரிய மனுஷனாக நடந்து கொண்டார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் இது போன்றவர்களை நம்பாதீர்கள் தலைவரே என்று பிரதீப்புக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் பிரதீப்புக்கு எதிராகவும், ரஜினியை பாராட்டியும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.