சூப்பர்ஸ்டாருக்கு இசையமைக்கப் போகும் இளம் ஹீரோ.. பிரதீப் ரங்கநாதனின் கனவு நிறைவேறுமா?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான லவ் டுடே திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டது. இன்றைய கால இளைஞர்கள் தங்களது காதலை எப்படி புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்பதை நகைச்சுவை காட்சிகளுடனும், செண்டிமெண்ட் காட்சிகளுடனும் இப்படம் இயக்கப்பட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

இப்படத்தில் முதல்முதலாக கதாநாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து வரும் ஹீரோவாகவும் முன்னேறியுள்ளார். இதனிடையே லவ் டுடே படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், சூப்பர்ஸ்டாரின் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.

தற்போது ரஜினிகாந்த் நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார், அண்மையில் அவரது பிறந்த நாளின் போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் வீடியோ வெளியாகி வைரலானது. இதனிடையே ரஜினியின் 170வது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. இப்படத்திற்கு பின்பு தலைவர் 171 படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளார்.

இதனிடையே இப்படத்திற்கு லவ் டுடே படத்தில் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை பிரதீப் ரங்கநாதன் தான் எடுத்துள்ளதாகவும், ரஜினி படமாக இருந்தாலும் யுவனின் இசை தான் தனக்கு வேண்டும் என பிடிவாதமாக தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி வருகிறாராம்.

இதற்கான காரணம் லவ் டுடே படம் ஹிட்டானதற்கு யுவனின் இசை பெரும் காரணமாக அமைந்ததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சினிமாவில் இசையமைக்க ஆரம்பித்து 20வருடங்களாகும் நிலையில் அஜித், விஜய் சூர்யா விஷால் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆனால் தற்போது தான் சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு முதன் முதலாக யுவனுக்கு கிடைத்துள்ளது. 80 களில் சூப்பர்ஸ்டாரின் படங்களில் இளையராஜாவின் இசை பெரும் பங்காற்றியது. இதனிடையே இசைஞானியின் வாரிசு சூப்பர்ஸ்டாரின் படத்தில் இசையமைக்க போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.