கடந்த வாரம் மிகப்பெரும் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் தான் இப்போது பெரும் சலசலப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இதன் ட்ரெய்லர் பார்த்தே கொதித்து போன பொதுமக்கள் படம் வெளிவருவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்கள். அதையடுத்து படம் ரிலீஸ் ஆகும் நாள் வரையிலும் இந்த எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அதனாலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி தியேட்டர்களில் வெளியானது.
அதைத்தொடர்ந்து படத்திற்கு எதிராக பல நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது. இருந்தாலும் படத்திற்கான வசூலில் எந்த குறையும் இல்லை. தமிழகம் மற்றும் கேரளாவில் இதன் வசூல் பாதிப்படைந்தாலும் மற்ற இடங்களில் லாபகரமான கலெக்சன் தான் வந்திருக்கிறது. அதன்படி 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது வரை பல மடங்கு வசூலை தட்டி தூக்கி இருக்கிறது.
அந்த வகையில் படம் வெளியான முதல் நாளிலேயே 8 கோடி வரை வசூலித்து இருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளில் 11 கோடியும், மூன்றாவது நாளில் 16 கோடியும் வசூல் லாபம் பார்த்திருக்கிறது. இப்படி வார இறுதி நாட்களில் அதிகரித்து வந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் ஏறுமுகமாக தான் இருந்தது.
அவ்வாறு பார்க்கையில் தி கேரளா ஸ்டோரி தற்போது 68 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்திருக்கிறது. இது நிச்சயம் பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயம் தான். ஏனென்றால் இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இருந்த இப்படத்தை எதிர்க்காத ஆட்களே கிடையாது.
இருப்பினும் இது போன்ற எதிர்ப்புகள் தான் படத்திற்கு இலவச ப்ரமோஷனாக அமைந்து விட்டது. அதனாலேயே தற்போது லாபகரமான கலெக்சன் வந்திருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் ஓரம் கட்டி வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.