செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் இராமமூர்த்தி. செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார்.
ஐந்தாவது வகுப்பு வரை படித்தார். தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ஆம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இது அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது.
சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.
1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு, ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
செந்தில் நடித்த சில திரைப்படங்கள்
இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
அறிமுகம்:
பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமான செந்தில் தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம் மூலம் பிரபலமானார். காமெடி கிங் கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த அத்தனைப் படங்களிலும் நகைச்சுவை மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கவுண்டமணி சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய ஓய்வு ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் தொலைக்காட்சிகளில் இன்றும் ஒளிபரப்பபடுகிறது . அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.
பல வருடங்கள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக நடித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக சார்லி சாப்ளின் 2, ஓவியாவை விட்டா வேற யாரு, காதலிக்க யாரும் இல்லை போன்ற படங்கள் நடித்துள்ளார். தற்போது சுரேஷ் சங்கையா என்னும் இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார்.