வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25, 2024

தவெக மாநாட்டில் மாஸ் காட்டும் தலைவர்களின் கட் அவுட்கள்.. விஜய் அரசியல் பயணம் இதுதானா?

விஜய்யின் அரசியல் மாநாடு பற்றிய அனைவரும் பேசி வரும் நிலையில் இந்த மா நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களின் போஸ்டர்கள் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜயின் அரசியல் பயணம்

அரசியலுக்கு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நிறைய பணமும், தொண்டர்கள் ஆதரவும், மக்களின் பேராதரவும் இருந்தால் தான் அதில் நீண்ட காலம் பயணிக்க முடியும் என்பதைவிட ஜெயிக்க முடியும். அப்படி, இந்த அரசியலில் கால் பதித்தவர்கள் பலர். அதில் ஜெயித்து மக்கள் மனதில் நின்றவர்கள் சிலர்தான்.

அந்த வெற்றி பெற்ற ஒருசில தலைவர்கள் மாதிரி வெற்றி பெற விஜய் விருப்பப்டுகிறார். அதனால் வெற்றிகரமான அரசியல் தலைவராக உருவெடுக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். விஜய் இந்த அரசியலுக்கு புதிது என்றாலும் அவர் அரசியலை பார்த்து வளர்ந்தவர், குறிப்பாக திராவிட அரசியலுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்தவர்.

இந்த நிலையில், விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தி, அறிக்கை வெளியிட்டார். அதன்பின், சமீபத்தில் அக்கட்சியின் கொடியும் கொடிப்பாடலும் வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்தார். இதுவரை பெரிதாக அரசியல் வந்தததற்கான எந்த அறிகுறிகளும் அவரிடம் தென்படாவிட்டாலும் வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றது, மூன்றெழுத்து மந்திரம் மாதிரி விஜயின் பெயர், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பில் விஜய் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல் இதெல்லாம் விஜய்கு அரசியல் இறங்குவதற்கான தைரியத்தைக் கொடுத்தாலும், திராவிட அரசியல் கோலோட்சி வரும் தமிழகத்தில் அக்கட்சிகளை எதிர்த்து, அவர் கட்சி எப்படி திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் செய்யும் என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

தவெக மாநாட்டில் தலைவர்களின் மாஸ் கட் அவுட்கள்

இந்த நிலையில் விஜய்க்கு சினிமா பிரபல்யமான இமேஜ் இருப்பது கூடுதல் பலமாக இருந்தாலும் அவரது கொள்கைகள், அவர் மக்கள் பிரச்சனைகளை அணுகும் விதம் இதெல்லாம்தான் தேர்தலில் அவருக்கான வாக்குகளை தீர்மானிக்கும் என்பதால் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடவுள்ள தவெகவின் முதல் மாநாட்டில் விஜய் அதுபற்றி அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கனவே பெரியார், அண்ணாவின் வழியில் அரசியல் செய்யப் போகிறார் என பேச்சு எழுந்து வரும் நிலையில் தவெகவின் மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 80 ஏக்கரில் இம்மாநாட்டு திடல், 100 அடி உயரத்தில் கொடிக் கம்பம், ஆகியவற்றின் பணி நடந்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன் பூமி பூஜை நடைபெற்று மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஏற்கனவே விஜய் அறிவுறுத்தலின்படி தொண்டர்கள், நிர்வாகிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாநாட்டில் அசம்பாவிதத்தை தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி, உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு இடம்பெற்றுள்ளன. இதற்கான சுமார் 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும், இதற்கெனெ பிரத்யேகமாக 25 குழுக்கள் மேற்பார்வை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த மாநாட்டின் நுழைவாயில் மக்களை கவரும் வகையில் கோட்டையின் மதில் சுவர் மாதிரி செட் அமைத்துள்ளனர். கொடியில் இருந்த யானைகள் படத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரித்துள்ள நிலையில் அதைப் பொருட்படுத்தாமல், இம்மா நாட்டில் நுழைவாயிலில் 2 யானைகளும் கால்களை உயர்த்தி போருக்கு தயாராக இருப்பதுபோன்ற வகையில் அமைக்கப்பட்டு, அதன் மத்தியில் வெற்றிக் கொள்கை திருவிழா என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

விஜய் யாருடன் கூட்டணி?

விஜய் அரசியலில் குதித்த நிலையில் இன்னும் தான் யார் ஆதரவாளர் என்பதை தெரிவிக்கவில்லை. அது இனி வரும் காலத்தில், கூட்டணி அமைப்பாரா? இல்லை தனித்து இயங்குவாரா? என்பது தெரியவரும். ஆனால் நாட்டிற்கு உழைத்த நல்லோர், தலைவர்களின் பாதையில் அவர் நேர்மையான வழியில் அரசியல் பயணம் செல்வதற்கான அறிகுறியாகத்தான் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் கட் அவுட்களை மாநாட்டில் இடம்பெறச் செய்திருப்பதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

TVK vijay -

- Advertisement -spot_img

Trending News