சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கவிழ்ந்த 14 இயக்குனர்கள்.. முதல் படத்தில் ஹிட் கொடுத்து என்ன பிரயோஜனம்

சினிமாவை பொறுத்தவரை பல இயக்குனர்கள் தங்களது முதல் படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து கதையை செதுக்கி வெற்றி பெற்றுவிடுவார்கள். வெற்றி பெற்ற பிறகு எல்லோருக்கும் வருவதுபோல் இயக்குனர்களுக்கும் ஒரு சோம்பேறித்தனம் வந்துவிடும். முதல் படம் மட்டுமல்ல இரண்டாவது படமும் ஒரு இயக்குநருக்கு ரொம்பவே முக்கியம் தான். பார்த்து பார்த்து செதுக்கிய கதையை முதல் படத்தில் இயக்கும் இயக்குநர்கள் இரண்டாவது படத்திலேயே தன்னிடம் சரக்கு இல்லை என்று நிரூபித்து விடுகிறார்கள்.

பாலாஜி தரணிதரன்:

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகு இவர் இயக்கிய சீதகாதி ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவிற்கு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தோல்வியடைந்தன.

ராஜேஷ்:

ராஜேஷ் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது. அதன்பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அதன்பின் ஆள் இன் ஆள் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் என அனைத்தும் அட்டர் பிளாப்.

ராஜேஷ் செல்வா:

ராஜேஷ் செல்வாவிற்கு முதல் படம் காலை பணி இந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. ஆனால் அதன்பிறகு கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் சுமார். பின்பு கடாரம் கொண்டான் பெரும் அடி வாங்கியது.

அருண் குமார்:

அருண் குமார் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சேதுபதி திரைப்படம் வெற்றி பெற்றது. கடைசியாக சிந்துபாத் திரைப்படம் மட்டும் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் அதன் பிறகு தற்போது வரை எந்த படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

மகிழ்திருமேனி:

முன்தினம் பார்த்தேனே என்ற திரைப்படம் மகிழ் திருமெனி முதல் திரைப்படம். அதன்பிறகு தடையர தாக்க திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வெளியான மீகாமன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. பின்பு தடம் படத்தில் கவனம் செலுத்தி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

திருக்குமரன்:

சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். அடுத்த படமான கெத்து, வில் உதயநிதியை வைத்து தோல்வி. மான் கராத்தேவிலேயே சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற படத்தின் காட்சிகளை அப்படியே வைத்து கைதட்டல் வாங்கியவர். இயக்குநருக்கு இப்போது படம் இல்லை.

ராம்பிரகாஷ் ராயப்பா:

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற ஃபேண்டஸி படத்தால் அறிமுகமானவர். முதல் படத்தில் பெரிய காஸ்டிங் இல்லாமல் திரைக்கதையால் வென்றவர். அடுத்த படமான போக்கிரி ராஜாவில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா என்று பெரிய காஸ்டிங் கிடைத்ததும் கதையில் கவனம் செலுத்தாமல் சொதப்பினார். அடுத்தது படம் கிடைக்கவில்லை.

நலன் குமாரசாமி:

சூது கவ்வும் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இரண்டாவது படத்தில் கவிழ்ந்தார். கொரியன் பட ரீமேக்கான காதலும் கடந்து போகும் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை. இன்னும் படம் எதிலும் கமிட் ஆகவில்லை. அனேகமாக சூது கவ்வும் 2 எடுக்கலாம்.

மணிமாறன்:

உதயம் என்ற படத்தை எடுத்தவர். அது வெற்றிமாறனின் திரைக்கதைக்காக பேசப்பட்டது. ஆனால் இரண்டாவது படமான புகழ் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல அரசியல் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். புரமோஷனும் இல்லை.

சாம் ஆண்டன்:

ஜிவி.பிரகாஷுக்கு டார்லிங் படம் மூலம் வாழ்க்கை தந்தவர். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் உடனே ஜிவியை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு இன்னொரு பேர் இருக்கு மூலம் கேரியரை கெடுத்துக்கொண்டார்.

ரத்தின சிவா:

தனது முதல் படமான வா டீல் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம் அதுவும் விஜய் சேதுபதி கால்ஷீட்டில் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு பேரரசு படம் போலத்தான் அமைந்தது றெக்க.

தனபால் பத்மநாபன்:

கிருஷ்ணவேணி பஞ்சாலை என்னும் படம் மூலம் கவனம் பெற்றவர். லுத்ஃபுதீன் நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், ஆர்ஜே பாலாஜியை வைத்து பறந்து செல்லவா படத்தை இயக்கினார். பஞ்சாலை தொழிலாளர்களின் அவலங்களை இயக்கியவரா இப்படி ஒரு படத்தை எடுத்தது என்ற அதிர்ச்சிதான் மிஞ்சியது.

டீகே:

யாமிருக்க பயமேன் என்ற ஹாரர் காமெடி படம் தந்தவர். முதல் படம் ஹிட் ஆனதால் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா என்று நல்ல காஸ்டிங் கிடைத்தது. ஆனால் கதையில் கோட்டை விட்டதால் கவலை வேண்டாம் படமும் ஃப்ளாப் ஆனது. கதையை நம்பாமல் அடல்ட் காமெடியை நம்பியதால் வந்த வினை அது.

கணேஷ் விநாயக்:

தகராறு படம் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் கணேஷ் இரண்டாவது படமான வீர சிவாஜியை விக்ரம் பிரபு, ஷாம்லி வைத்து தொடங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சுமாராய் கூட போகவில்லை.

- Advertisement -spot_img

Trending News