தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D56 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.‘லப்பர் பந்து’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த டைரக்டர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார்.தனுஷ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து முதன்முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.மேலும்,எஸ்.ஜே.சூர்யா,வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.கிராமத்துப் பின்னணியில் மாஸ் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,D56 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முக்கியமான மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவிருந்த தினேஷ் புருஷோத்தமனுக்குப் பதிலாக,தற்போது ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதற்கிடையே,படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.மதுரையில் தொடங்கிய படப்பிடிப்பின் அடுத்தகட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தனுஷின் நடிப்பும்,தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கமும் இணையும் இந்தப் படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் மாற்றம் படத்தின் உருவாக்கத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்,தனுஷின் கேரக்டர் ரசிகர்களைக் கவருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




