வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரபல ஓடிடியில் வெளியாகப்போகும் தளபதியின் பீஸ்ட்.. அறிவிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் உலக அளவில் வெளியானது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத் திரைப்படம் வெளியான பிறகு சில எதிர்மறை விமர்சனங்கள் உட்பட கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தில் ஏதோ ஒன்று குறையாக இருக்கிறது என்று கூறி வந்தனர்.

இப்படி பல விமர்சனங்கள் இருந்தாலும் பீஸ்ட் படத்தின் வசூல் நிலவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மேலும் பீஸ்ட் படத்திற்கு மறுநாள் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படமும் படத்திற்கு கடுமையான போட்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் விஜய் என்ற ஒருவரால் முறியடிக்கப்பட்டது.

படம் வெளியான ஆறு நாட்களிலேயே 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் நல்ல வியாபாரம் ஆனதால் பாக்ஸ் ஆபீசிலும் மாஸ் காட்டியது. இப்போதும்கூட பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பீஸ்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட்டில் வரும் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோன்று இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் அதே நாளில் வெளியாக இருக்கிறது. அந்த அறிவிப்பையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. படம் அதற்குள் ஓடிடியில் வெளியாகிறது என்று பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், அதிலும் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News