செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

காலத்தால் அழிக்க முடியாத 7 படங்கள்.. இப்ப ரீ-ரிலீஸ் பண்ணா கூட 100 நாள் கன்ஃபார்ம்

சினிமாவில் சில படங்கள் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து இருக்கும். ஆனால் அடுத்தடுத்த படங்கள் வெளியானால் ரசிகர்கள் இந்தப் படத்தை மறந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சில படங்கள் நாம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவ்வாறு காலத்தால் அழியாத 7 படங்களை பார்க்கலாம்.

மகாநதி : கமலஹாசன் இப்படத்தில் பாசம், சபலம், இயலாமை, துக்கம், கோபம் என அனைத்தையும் காட்டியிருந்தார். சிறைச் சாலையில் நடக்கும் அநியாயங்கள், குழந்தைகள் பாலியல் தொழில்கள் குறித்த விழிப்புணர்வுகளை பற்றியும் இப்படம் ஏற்படுத்தி இருந்தது. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மேலும் மெருகேற்றியது.

அழகி : தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகி. இப்படம் வெளியான சமயத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின்பு படத்தின் விமர்சனத்தால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. அதன்பிறகு பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றது. மேலும் அழகி படத்தின் கதை பலரை உறங்க விடாமல் செய்தது.

கன்னத்தில் முத்தமிட்டால் : மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், கீர்த்தனா பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டாள். இப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். தன்னைப் பெற்ற தாயிடம் 20 கேள்விகள் கேட்க வேண்டும் என்ற அமுதாவின் கதைதான் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தவமாய் தவமிருந்து : சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து படத்தின் தந்தையின் தியாகம் எத்தகையது என்பதை உணர்த்தியது. அந்த கதாபாத்திரத்தை திறம்பட செய்து இருந்தார் ராஜ்கிரண். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு மம்முட்டி மற்றும் நாசர் ஆகியோர் படக்குழு அணுகினார்கள். கடைசியில் ராஜ்கிரணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து படத்தில் ஆணிவேராக இருந்தார்.

அருவி : வாழ நினைக்கும் ஒரு இளம் பெண்ணின் போராட்டக் கதை தான் அருவி. சாதாரண குடும்பத்தில் தாய், தந்தை அரவணைப்பில் வளர்ந்த அருவி இளவயதில் உடலால் அவர் கெட்டு விட்டார் என குடும்பமே அவரை தள்ளி வைக்கிறது. அதன்பின் திருநங்கையின் ஆதரவில் இருக்கும் அருவி என்ன கஷ்டங்கள் படுகிறார் என்பதே இப்படத்தின் கதை.

காக்கா முட்டை : கதாநாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். குப்பத்தில் இருக்கும் 2 குழந்தைகள் பீட்சா சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் பணத்தை சேர்க்கிறார்கள். ஆனால் இந்த குழந்தைகள் பிரச்சனையில் மாட்டும் போது அதை எப்படி அரசியல் மாற்றுகிறார்கள் என்பது காக்கா முட்டை படத்தின் கதை.

96 : பிரேம் குமார் இயக்கத்தில் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 96. பள்ளி பருவ காதல் 22 வருடங்கள் கழித்தும் அப்படியே இருக்கிறது. மேலும் இவ்வளவு அழகாக யாரும் காதலை சொல்லிவிட முடியாது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இதிலிருந்து வெளிவர எப்படி ஒரு வாரமாவது ஆகியிருக்கும்.

Trending News