எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் எந்த அளவிற்கு விளம்பரம் செய்கிறோமோ அந்த அளவிற்கு தான் பொருள் மக்கள் மத்தியில் சென்றடையும். அதுமட்டுமல்லாமல் மக்கள் ரசிக்கும்படியாக அந்த விளம்பர படம் இருப்பது அதைவிட முக்கியமான ஒன்று. இல்லையெனில் அந்த விளம்பரத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு விளம்பர படம் தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜியின் சமீபத்திய விளம்பர படம் தான் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது.
சப்யாசச்சி மங்கள் சூத்ரா என்ற நகைக்கான விளம்பர படம் ஒன்றை உருவாக்கி இருந்தார். மங்கள் சூத்ரா என்பது திருமணமான இந்துப் பெண்கள் அணியும் நெக்லஸ் வகை ஆபரணம். இந்நிலையில் இந்த விளம்பர படம் இந்து கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாக புகார்கள் எழுந்தது.
அதற்கான காரணம் என்னவென்றால் இந்த விளம்பர படத்தில் மாடல்கள் அணிந்திருந்த உடை தான். ஆம் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த பெண் ஒருவர் கழுத்தில் தாலியுடன் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் தான் பிரச்சனை இந்த அளவிற்கு வலுக்க காரணமாக அமைந்தது.

இதுபோன்ற புகைப்படத்தை அவர் தவிர்த்து இருக்கலாம் என்பதே பலரது பொதுவான கருத்தாக இருந்தது. இந்நிலையில் விளம்பரத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் வலுத்ததால் நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.