எதிர்பார்ப்பை எகிற வைத்த கைதி 2.. டிவிஸ்ட்டை உடைத்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது பல கோடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படத்தின் இறுதிக்காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்து மிரட்டி இருக்கும் சூர்யாவின் நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் அடுத்த பாகம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் அடுத்த பாகம் விக்ரம் 3 அல்லது கைதி 2வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் சுவாரசியத்துடன் பதிலளித்தார்.

அதில் ஒரு ரசிகர் கைதி திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் அதில் இறப்பது போன்று காட்டப்பட்டிருந்தது. பிறகு எப்படி அவர் விக்ரம் திரைப்படத்தில் உயிருடன் வந்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். சொல்லப்போனால் விக்ரம் திரைப்படத்தை பார்த்த பலருக்கும் இந்த கேள்வி எழுந்தது.

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அந்த அன்பு கேரக்டர் உண்மையில் சாகவில்லை. அது எப்படி என்று கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் உங்களுக்கு தெளிவாக காட்டப்படும் என்று கூறினார். இதன் மூலம் கைதி திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளிவருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் அதில் சூர்யாவின் ரோலக்ஸ் மற்றும் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் மோதுவதையும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது லோகேஷ், விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதையடுத்து கைதி 2 திரைப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →