திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக புகழ்பெற்று விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுக்க அப்போது பலரும் போட்டி போட்டு வருவார்கள். அந்த வகையில் ஏராளமான திரைப்படங்களை இயக்கிய வெற்றி கண்ட இயக்குனர் ஒருவருக்கு திடீரென தயாரிப்பாளராகும் ஆசை வந்திருக்கிறது. அதை நடிகர் திலகம் சிவாஜி நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
இளமை ஊஞ்சல் ஆடுகிறது, நினைவெல்லாம் நித்யா போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சி.வி ஸ்ரீதர் தன் நண்பர்களுடன் இணைந்து படம் தயாரிக்க ஆசைப்பட்டிருக்கிறார். அதனால் அவர் சிவாஜியை சந்தித்து ஒரு கதையை கூறி இருக்கிறார்.
கதையைக் கேட்ட சிவாஜி அந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் அதற்கு ஸ்ரீதர் இந்த படத்தை தயாரிக்க நான் ஆசைப்படுகிறேன். அதனால் நீங்கள் இதில் நடிப்பதாக ஒரு அறிவிப்பு கொடுத்தால் போதும் எனக்கு பைனான்ஸ் கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார்.
ஏனென்றால் அப்போது அவரிடம் நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்து புக் செய்யக்கூட காசு இல்லையாம். அதனால் சிவாஜியிடம் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அதைக் கேட்டு கொஞ்சம் கூட யோசிக்காமல் சிவாஜி உடனே சரி என்று கூறி சம்மதித்திருக்கிறார்.
அதன் பிறகு சிவாஜி ஸ்ரீதரின் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அந்த படத்தை தயாரிப்பதற்கு தேவையான பணம் ஸ்ரீதருக்கும் அவருடைய நண்பர்களான எஸ் கிருஷ்ணமூர்த்தி, டி கோவிந்தராஜன் ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது.
ஆனாலும் சிவாஜி அந்த படத்திற்கு அட்வான்ஸ் வேண்டாம் படம் ரிலீஸ் ஆனதும் சம்பளம் கொடுங்கள் போதும் என்று கூறியிருக்கிறார். அதை பார்த்து நடிகை பத்மினியும், சாவித்திரியும் கூட அட்வான்ஸ் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் அமரதீபம் என்ற பெயரில் அப்படம் வெளியாகி வரவேற்பு பெற்றது.