சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரைப்படங்களில் யாராவது நடித்தால் அவர்கள் பெரிய உச்சத்தை அடைந்து விடுவார்கள்.உதாரணத்திற்கு நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டாரோட தனது முதல் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நிலையில்,அவர் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக தற்போது வலம் வந்திருக்கிறார்.
அதேபோல் சூப்பர் ஸ்டாருடன் நடித்தால் தங்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரும் என்பதால்,அவருடன் நடிக்க பல நடிகர்,நடிகைகள் தற்போது வரை வாய்ப்பு கிடைத்தால் அப்படத்தில் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து பிரபலம் அடைவார்கள். இவ்வளவு பெருமை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நடிகரை வில்லனாக மாற்றியதால் அந்த நடிகரின் கேரியரே போனது என்று சொன்னால் அனைவருக்கும் ஆச்சரியத்தையும்,அதிர்ச்சியையும் தான் உருவாக்கியுள்ளது.
60 காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இருபெரும் நடிகர்கள் மக்களை தன் வசம் ஈர்த்த நிலையில், தனக்கென தனி நடிப்பு திறனை கொண்டு வலம் வந்தவர் தான் நடிகர் ஜெய்சங்கர்.1960ஆம் ஆண்டு வெளியான இரவும்,பகலும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் ஏழு ஆண்டுகளில் 100 திரைப்படத்தில் நடித்து சாதனை படைத்தவர்.
175 திரைப்படங்களுக்கு மேல் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஜெய்சங்கர்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தால் அவரது ஹீரோ அந்தஸ்தே பறி போனது. தமிழகத்தின் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், சிஐடி சங்கர் என்று மக்களால் அழைக்கப்பட்ட இவரை சூப்பர் ஸ்டாரின் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் சுக்கு நூறாக மாற்றியது எனலாம்.
1980 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ரதி அக்னிஹோத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் முதல்முறையாக வில்லனாக களமிறங்கினார். காளையன் கதாபாத்திரத்தில் கலக்கிய சூப்பர் ஸ்டாருக்கு இத்திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது.
ஆனால் ஜெய் சங்கர் வில்லனாக நடித்து பாராட்டுக்களை வாங்கி இருந்தாலும்,இனி அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரை ஹீரோவாக கொண்டாடிய மக்களே சொல்லுமளவிற்கு இவருடைய நடிப்பு அத்திரைப்படத்தில் வில்லத்தனமாக இருந்தது. அதே ஆண்டில் ஜெய்ஷ்ங்கரின் நடிப்பில் ஜம்போ உள்ளிட்ட 5 திரைப்படங்கள் வெளியானது.ஆனால் அத்தனை திரைப்படங்களுமே தோல்வியைத் தான் தழுவியது.அதன்பின்பு தான் ஜெய்சங்கர் துணைக் கதாபாத்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.