கவிஞர் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் கண்ணதாசன். தமிழ் சினிமாவில் 4500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களுடன் திகழ்ந்தார். அவரது வாழ்க்கையில் ஒரு திகைப்பு தரும் சம்பவம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்துடன் தொடர்புடையது.
ரஜினிகாந்த் அறிமுகப்படமான இந்த படத்தை கே. பாலசந்தர் இயக்க, இசையை எம்.எஸ். விஸ்வநாதன் கவனித்தார். ஒரு பாடலுக்கான வரிகளை கண்ணதாசன் எழுதாததால், எம்.எஸ்.வி பாடலுக்கான ஒத்திகையை நாளை பார்க்கலாம் என தவிர்க்க, பாலசந்தர் கடும் கோபம் அடைந்தார். பாடல் வரிகளை எதிர்பார்த்து படப்பிடிப்பும் நிறுத்தப்படும் நிலையில் இருந்தது.
அந்த நேரத்தில் கமல் ஹாசன், மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணதாசனைப் பற்றிக் கூற, பாலசந்தர் இன்னும் கோபமாகி நானும் தூங்கட்டுமா? என சத்தம் போட்டார். இந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட கண்ணதாசன் அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்றார். இது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தேசிய விருது பெற்ற பாடல் என்ன தெரியுமா?
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு உதவியாளர் கண்ணதாசன் போய் விட்டதாகவும், பாடல்களை எழுதி ஒரு பேப்பரை அவரிடம் வழங்கியதாகவும் கூறினார். அதில் எழுதியிருந்தது ஒரு அற்புதமான பாடல்கள்.
அந்த பேப்பரில் கண்ணதாசன் ஏழு வகையான பாடல் வரிகளை எழுதி வைத்திருந்தார். ஒவ்வொன்றும் தனித்துவமான வரிகள். எதை தேர்வு செய்வது என்று குழம்பிய பாலசந்தர், இறுதியில் ‘ஏழுசுரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலைத் தேர்ந்தெடுத்தார். அந்த பாடலை வாணி ஜெயராம் அழகாக பாடினார்.
அந்த அரைத்தூக்கத்தில் எழுந்து எழுதிய பாடல், தேசிய விருது பெற்றதோடு, வாணி ஜெயராமுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. அபூர்வ ராகங்கள் படத்திற்கு மொத்தம் மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. கண்ணதாசன் திறமையின் ஒளி தூக்கத்தில் கூட தங்கமாய் மலர்ந்த அதிசய நிகழ்வாக இது நிலைத்திருக்கிறது.