நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி பலருக்கும் தெரியும். கேமரா முன்பு வந்து விட்டாலே அவர் அரக்கனாக மாறிவிடுவார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். அவரைப் போல் நடிக்க யாராலும் முடியாது என்று முன்னணி நடிகர்களே கூறுவதுண்டு.
அப்படிப்பட்ட அந்த ஜாம்பவான் முன்னால் ஒரு நடிகர் ஆர்வக்கோளாறால் ஓவர் ஆக்ட் செய்து நன்றாக வாங்கி கட்டி இருக்கிறார். அந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி இங்கு காண்போம். 1992 ஆம் ஆண்டு சிவாஜி, கமல்ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தேவர் மகன்.
மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிவாஜியுடன் இணைந்து நடிக்கிறோம் என்ற காரணத்தினாலோ என்னவோ வடிவேலு ஒரு காட்சியில் தன்னையும் மீறி ஓவராக நடித்திருக்கிறார்.
அப்ப படத்தில் சிவாஜி இறப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். மிகவும் நெகிழ்ச்சியாக எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சியில் கமல்ஹாசன் மிகவும் தத்ரூபமாக கதறி அழுவார். அதேபோன்று வடிவேலு மற்றும் சங்கிலி முருகன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழுது தீர்த்தார்களாம்.
அதைப் பார்த்து கடுப்பான சிவாஜி வடிவேலுவை கூப்பிட்டு இந்த படத்தில் கமல் தான் எனக்கு மகனாக நடிக்கிறார். நீங்கள் இருவரும் எனக்கு இரட்டைப் பிள்ளைகள் போல் எதற்கு ஓவராக அழுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதனால் பயந்து போன வடிவேலு பதில் சொல்ல முடியாமல் முழித்திருக்கிறார்.
அதன் பிறகு சிவாஜி, வடிவேலுவிடம் அந்த காட்சியில் எப்படி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைக் கேட்டு வடிவேலு அந்த காட்சியில் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படி சிவாஜியே தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததை பற்றி தற்போது வடிவேலு ஒரு பேட்டியில் மிகவும் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.