தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட தம்பி ராமையா இதுவரை மனு நீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், மணியார் குடும்பம் உள்ளிட்ட 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இருந்தாலும் இவரின் நடிப்பில் வந்த படங்கள் பலரது விருப்பம் எனலாம். அப்படி தம்பி ராமையா கலக்கிய 5 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
மைனா : இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்தில் விதார்த், அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருப்பர். காதல் , ஆக்க்ஷன் என உருவாகியுள்ள இத்திரைப்படம் காடு, மலை பகுதிகளை அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்த தம்பிராமையா நகைச்சுவை காட்சிகளுடனும், செண்டிமெண்ட் காட்சிகளுடனும் அசத்தியிருப்பார். இத்திரைப்படத்திற்காக தேசிய விருதும், தமிழ்நாடு ஸ்டேட் விருதும் அவருக்கு கிடைக்கப்பெற்றது.
கும்கி : இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தில் லட்சுமி மேனன், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்திருப்பர். காட்டில் உள்ள யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இப்படம், பெரும் வெற்றியை பெற்றது. இதில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் பிடிக்காத மாமாவாகவும், நகைச்சுவை நடிகர்காகவும் வலம் வருவார். இத்திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது.
சாட்டை : இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் வெளியான சாட்டை படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தம்பி ராமையா இப்படத்தில் ஆசிரியராக வலம் வரும் நிலையில் சமுத்திரக்கனிக்கு எதிரான வில்லத்தனமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். தம்பிராமையா வில்லத்தனத்தால் செய்யும் காமெடியும் இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
கொம்பன் : இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவான கொம்பன் திரைப்படத்தில் லட்சுமி மேனன், கார்த்தி உள்ளிட்டோர் நடித்திருப்பர். மாமன் கதாபாத்திரத்தில் வலம் வரும் தம்பிராமையாவின் காமெடி, செண்டிமெண்ட் காட்சிகள் அடிதூளாக இருக்கும். படம் முழுவதும் கார்த்தியுடன் மாப்ள, மாப்ள என வலம் வரும் தம்பிராமாயாவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
வினோதய சித்தம் : சமுத்திரக்கனி இயக்கி நடித்த இப்படத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இறப்பு என்பதை மறந்து விட்டு உலக வாழ்க்கையை பிளான் போட்டு வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இப்படம் சமர்ப்பனமாக அமைந்தது. படம் முழுவதும் காமெடி, செண்டிமெண்ட் என உலா வரும் தம்பிராமையா ஒரு நல்ல தந்தையாகவும் நடித்திருப்பார்.