தக் லைஃப் திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படமான ‘இஞ்சி வெல்லம்’, 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 90 நாட்களில் நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டுள்ளன.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ‘பாக்கெட் நாவல்’, ‘ட்ரெயின்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதி- சாய் பல்லவி ஜோடி இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சாரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் 19-வது திரைப்படம் என்பதால், இப்படத்தின் பாடல்களும் வழக்கம்போல் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட்டடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்களைப் பார்க்கும்போது, ‘அலைபாயுதே’, ‘ஓ காதல் கண்மணி’ போன்ற காதல் கதைக்களத்தில் இப்படமும் உருவாகியிருக்குமோ என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




