நட்சத்திரங்கள் பலரும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகின்றனர். பலரும் போது வெளியில் இதனை கூறுவதில்லை என்றாலும் அந்த உதவியால் பயன் அடைந்தவர்கள் சிலர் அதனை வெளியுலகிற்கு தெரிவித்து விடுகின்றனர்.
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர் கமல்ஹாசன். சினிமாவிலுள்ள அனைத்து வேலைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார். அரசியலிலும் தற்போது முனைப்பு காட்டி வரும் நடிகர் கமல் செய்த ஒரு உதவியை கிரிக்கெட் வீரர் ஒருவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.
ஐ.பி.எல்லை போலவே மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளும் நடந்து வருகிறது. திவ்யங்க் பிரிமியர் லீக் என்னும் பெயரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகள் உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள சென்னை அணிக்கு ஸ்பான்சர்ஷிப்பும், அணிக்கான பயணம் மற்றும் விசா செலவுகளை வழங்க முதலில் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் மறுத்து விடவே அணியினர் என்ன செய்வது என தெரியாமல் தவித்த வந்துள்ளனர். அப்போது அணியின் மேனேஜர் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து இந்த விஷயங்களை கூறியுள்ளனர்.
உடனே தன்னுடைய மேனேஜரை அழைத்த கமல் இவர்களுக்கான டிக்கெட், விசா போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து ஸ்பான்சர்ஷிப்பும் வழங்க கூறியுள்ளார். கமல் இவர்களிடம் உங்களுடைய அனைத்து தேவைகளும் உடனே சரி செய்யப்படும். சென்று கோப்பையுடன் வந்து என்னை பாருங்கள் எனக்கூறி அனுப்பியுள்ளார்.
கூறியது போலவே இரண்டு நாட்களில் டிக்கெட், விசா ஏற்பாடு செய்து அனுப்பியும் விட்டுள்ளார். அவர் கூறியது போலவே துபாய் சென்று போட்டியில் கலந்துக்கொண்ட சென்னை அணியினர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி சென்னை வந்து கமல்ஹாசன் நடிகரை சந்தித்தும் உள்ளனர்.
தங்களுக்கு நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சென்னை அணியின் கேப்டனும், இந்திய அணியின் துணைக் கேப்டனுமான திரு. சச்சின் சிவா கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஊனமுற்றோர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2019ஆம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி உள்ளது நம்மில் பலருக்கு தெரியாது.
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய வணிகம் சினிமாவும், கிரிக்கெட்டும். முன்பு தேசிய அளவில் விளையாடி சம்பாதிக்கும் பணத்தை விட தற்போது ஐபிஎல் அடிப்படை ஏலமாகவே வீரர்கள் சம்பாதித்து விடுகின்றனர். ஆனால் ஐ.பி.எல் மற்றும் கிரிக்கெட்டை தவிர்த்து இந்திய அளவில் எந்த விளையாட்டிற்கும் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்க படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.