ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பைக்குக்கு முக்கிய பங்கு கொடுத்த 7 படங்கள்.. கம்பீரமாக தோன்றிய அஜித்!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத் தளத்தின் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருசக்கர வாகனங்களை மையமாகக்கொண்ட அல்லது இருசக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்திய திரைப்படங்களை இங்கே காணலாம்.

திருமலை: இயக்குனர் ரமணா இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் பைக் மெக்கானிக் ஆக நடித்திருப்பார். கதைப்படி ஜோதிகா மீது காதல் கொள்ளும் அவர் பைக்கில் அடிக்கடி அவரைக் காண செல்வதும் விவேக்கை பைக்கில் உட்கார வைத்து ஆந்திரா வரை கொண்டுசெல்லும் காமெடியும் மிகப்பிரபலம். இந்த படத்திற்கு முன்பு வரை அதிகம் காதல் கதைகளில் நடித்து வந்த விஜய் இதன் பிறகு அதிக ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

என்னை அறிந்தால்: அஜித் குமார் பைக் மற்றும் கார் ரேஸ்களில் பங்கு பெறுபவர் என்பது நமக்கு விளங்கிய ஒன்று. பல படங்களில் அவர் இரு சக்கர வாகனத்துடன் தோன்றியுள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் போலீஸ்காரராக நடித்திருப்பார். அந்தப்படத்தில் ராயல் என்ஃபீல்டு பைக் கொண்டுவருவார். அவர் பைக்கில் வரும் காட்சிகளெல்லாம் கம்பீரமாக இருக்கும்.

பொல்லாதவன்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த முதல் வெள்ளித்திரை சினிமா பொல்லாதவன். தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் பல்சர் பைக் முக்கியமானதொரு கதாபாத்திரமாக அமைந்தது. தனுஷ் வாங்கியிருக்கும் புதிய பைக் தொலைந்து போக அதைத் தேடிப் போய் பல வில்லங்கங்களில் சிக்கிக் கொள்வதாக கதை செல்கிறது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அச்சம் என்பது மடமையடா: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், சதீஷ் மற்றும் பலர் நடித்த திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. இந்தப்படத்தில் தான் வாங்கும் புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்-இல் கன்னியாகுமரி வரை சென்று காலை நேர சூரியனை தரிசிக்க வேண்டும் என்று விருப்ப படுகிறார் சிம்பு. நாயகி மஞ்சிமா மோகன் அவருடன் சேர்ந்து கொள்ள அவர்களுக்கு இடையே பிறக்கும் காதல், மஞ்சிமா மோகனை துரத்தும் ஆபத்து என்று கதை விரிகிறது. ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் இனிமையாக அமைந்தது.

இரும்பு குதிரை: அதர்வா, பிரியா ஆனந்த், லக்ஷ்மி ராய் மற்றும் பலர் நடித்த திரைப்படம் இரும்பு குதிரை. இந்த படத்தில் பைக் ரேஸ், சூப்பர் பைக் பிரதான கதாபாத்திரங்களாக வருகிறது. இக்கதையில் சொன்னது போல ஒருவனது பைக் அவனது அடையாளமாக மாறிப் போகும் என்பது நிதர்சனம். நல்ல மேக்கிங் இருந்தும் இந்த படம் சொதப்பலான திராக்கதையால் மண்ணைக் கவ்வியது.

தேவ்: கார்த்தி, ரகுள் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தில் BMW 310GS வகை பைக் கொண்டு ஊர் சுற்றும் கதாபாத்திரம் நாயகனுக்கு. நாயகியோ பெரிய கம்பனி ஓனர். இவர்கள் இருவருக்குள் ஏற்படும் காதலை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. திரைக்கதை சொதப்பலால் இந்த படம் சீக்கிரமே தோல்வியை தழுவி பெட்டிக்குள் சென்றது.

வலிமை: அஜித் குமார் நடித்திருந்த இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய வினோத் இயக்கி இருந்தார். பெரும் வசூல் செய்த இந்த படத்தில் பைக் சண்டை காட்சிகள் அதிகம். ஹீரோவும் வில்லனும் அரங்கேற்றும் பைக் சாகசங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இந்த படத்திற்கு அஜித்தின் ஆஸ்தான யுவன் இசை இருந்தார்.

Trending News