சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் தோல்வியையடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு வருடம் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அதன் பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் வரலாற்று படமான கங்குவா படத்தை தற்போது மும்முரமாக இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
இதனிடையே கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் மற்ற பிரபலங்கள் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக சிறுத்தை சிவாவின் படங்கள் குடும்பத்தோடு சேர்ந்த ஆக்ஷன் கதைக்களமாக இருக்கும். ஆனால் கங்குவா படம் வரலாற்று படம் என்பதால் இவர் எப்படி இந்த படத்தை எடுக்கப்போகிறார் என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது.
அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற நிலையில், திடீரென கோவாவில் ஷூட்டிங்கை நடத்தி வந்தனர். ஆனால் கோவா படப்பிடிப்பில் சூர்யாவின் கெட்டப் வரலாற்று பட தோற்றம் போல் இல்லாமல், இக்காலத்து சூர்யா போல் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த விஷயம்,கங்குவா படம் முழுக்க வரலாற்று படம் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
இருந்தாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாத வகையில் இப்படத்தில் நடித்துள்ள 10 நடிகர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த வகையில் பொதுவாக பேன் இந்திய படங்களில் அதிகமாக அக்கடு தேசத்து நடிகர்களை வைத்து தான் இயக்குனர்கள் படத்தை எடுப்பார்கள். உதாரணமாக அண்மையில் வெளியான சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர், விஜய் நடிப்பில் ரிலீசாக உள்ள லியோ உள்ளிட்ட படங்களில் அதிகமாக அக்கடு தேசத்து நடிகர்கள் தான் உள்ளார்கள்.
ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தில் அதிகமான தமிழ் நடிகர்களை நடிக்க வைத்து விதிவிலக்காக அமைந்துள்ளார். அதில் நடிகர் கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், நட்டி நடராஜ், கே.எஸ் ரவிக்குமார், நடிகை கோவை சரளா உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் கங்குவா படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, கே.ஜி.எப் பட புகழ் அவினேஷ், பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட சில அக்கடு தேசத்து நடிகர்கள் மட்டும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மதன் கார்க்கி வசனம் எழுதி வருகிறாராம். மேலும் இயக்குனர்களான பிரஷாந்த் நீல், ராஜமௌலி உள்ளிட்டோருக்கே டப் கொடுக்கும் வகையில், தாஹர் யூனிட் நிறுவனத்திலிருந்து பிரம்மாண்ட தொழில்நுட்பம் கொண்ட கேமராவை சிறுத்தை சிவா இப்படத்தில் பயன்படுத்தி வருகிறாராம். இதற்கு முன்பாக இந்த கேமராவை புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப், பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்திய நிலையில், முதன்முறையாக தமிழ் சினிமாவில் கங்குவா படத்துக்காக இந்த கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.