Kaviyarasu Kannadasan: எண்ணற்ற பாடல்களின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் கண்ணதாசன். இவரின் பாடல் வரிகளுக்கு என்று தனித்துவம் இருக்கும் நிலையில், இவர் தயாரிப்பில் மேற்கொண்ட 5 படங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.
தமிழ் சினிமாவில் இவரின் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. அவ்வாறு இருக்க இவர் தயாரித்த அந்த ஐந்து படங்கள் தான் மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன், வானம்பாடி, சுமைதாங்கி.
அதிலும் குறிப்பாக கவலை இல்லாத மனிதன் அவரை மிகவும் கவலை கொள்ளச் செய்ததாக பத்திரிகை ஒன்றில் பேசியிருக்கிறார். 1960ல் கே சங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் கவலை இல்லாத மனிதன். இப்படத்தில் எம் ஆர் ராதா, சந்திரபாபு, டி ஆர் மகாலிங்கம், டி எஸ் பாலையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள்.
இப்படத்தில் சந்திரபாபுக்கே உரிய நகைச்சுவை கதாபாத்திரத்தை தவிர்த்து சீரியசான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது சந்திரபாபு சரிவர வராமல் இருந்து, மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்திரபாபு ஒரு பாடலை பாடிய போதும், அதற்கான பெயர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பாலையாவின் இரு மகன்கள் ஆன எம் ஆர் ராதாவும், சந்திரபாபுவும் இடம் பெற்றிருப்பார்கள். எம் ஆர் ராதா மேற்கொள்ளும் செயல்களால் சொத்துக்களை இழந்து அதன் பின் சந்திரபாபு குடும்பத்தை மேல் நோக்கி கொண்டு வரும் விதமாய் கதை அமைக்கப்பட்டு இருக்கும். பல வசனங்கள், காட்சியமைப்புகள் நன்றாக அமைந்திருந்தும் படத்தில் சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் இல்லாமல் இப்படம் மனதை கவரவில்லை என்றே கூறலாம்.
மேலும் கவியரசு கண்ணதாசன் இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஏற்றதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தில் இவரின் பாடல்கள் இடம் பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கண்ணதாசனுக்கு வணிகரீதியாய் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி அதன் பிறகு இரண்டு படங்களை மேற்கொண்டு தான் அவற்றிலிருந்து மீண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.