தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்றாலே நம் நினைவில் வரும் ஒரே ஒரு முகம் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதாவின் முகம் தான். உச்சியில் இருந்து பாதம் வரை தனது அழகாலும், நடிப்பாலும் இன்று வரை பலரது மனதில் கனவு கன்னியாக வாழந்துக்கொண்டிருக்கிறார் சில்க் ஸ்மிதா. 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்த சில்க் ஸ்மிதா இன்று உயிருடன் இல்லையென்றாலும் அவரின் திரைப்படங்கள் நமமை என்றுமே திரும்பி பார்க்க வைக்கும். அதில் சில்க் ஸ்மிதா நடித்த 5 திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
வண்டிச்சக்கரம் : 1980 ஆம் ஆண்டு சிவக்குமார், சரிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வண்டி சக்கரம் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக இருந்தது. சிறந்த நடிகர், நடிகை என ஃபிலிம்ஃபேர் விருதும் இத்திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முதன் முறையாக விஜயலட்சுமி என்ற பெயருடன் சில்க் ஸ்மிதா நடித்த நிலையில், அப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மதுபானக்கடைகள் கடையை நடத்தி வரும் கவர்ச்சி பெண்ணாக நடித்த இவர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் இத்திரைப்படத்திற்கு பின்பே சில்க் ஸ்மிதா என்ற பெயரை பெற்றார்.
அலைகள் ஓய்வதில்லை : 1981ஆம் ஆண்டு நடிகை ராதா, கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் இன்று வரை இளசுகளுக்கு பிடித்த திரைப்படம் எனலாம். இத்திரைப்படத்தில் சில்க்ஸ்மிதா ராதாவின் அண்ணியாகவும், தியாகராஜனின் மனைவியாகவும் எலிசா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சில்க் ஸ்மிதாவிற்கு இத்திரைப்படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது எனலாம்.
நீங்கள் கேட்டவை : இயக்குனர் மற்றும் நடிகரான தியாகராஜன் நடிப்பில் வெளியான நீங்கள் கேட்டவை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா நடன கலைஞராக வலம் வருவார். இவருடன் தியாகராஜன் ஆடிய அடியே மனம் நில்லுனா நிக்காதடி என்ற பாடல் இன்றுவரை குத்தாட்டம் போட வைக்கும். சில்க்ஸ்மிதா இத்திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அழகில் ஜொலித்திருப்பார் என்று சொல்லலாம்.
மூன்றாம் பிறை : பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கமலஹாசன் மீது ஒருதலை காதல் கொண்ட பெண்ணாக சில்க் ஸ்மிதா இத்திரைப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்..
சில்க் சில்க் சில்க் : 1983ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா கதாநாயகியாக மூன்று வேடத்தில் நடித்த திரைப்படம் தான் இத்திரைப்படம். சில்க் ஸ்மிதா நடித்த மூன்று வேடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்திருப்பார். கடத்தல், காமெடி, ஆக்சன் என இத்திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா புகைப்பிடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்று சர்ச்சையை உண்டாக்கியது. இருந்தாலும் இத்திரைப்படம் சில்க் சுமிதாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.