தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக பார்க்கப்படும் விஜய்க்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் இவருடைய படங்கள் இல்லாமே வெளிநாடுகளில் சமீப காலமாக ஏழு படங்கள் அதிக லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசூலில் பொளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் நடிகர்களுக்கு இப்போது வெளிநாடுகளிலும் மவுசு அதிகமாகி விட்டது. அதனால் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளிலும் தமிழ் படங்கள் வசூல் சாதனை புரிந்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் நல்ல லாபம் பார்த்தது கோலிவுட்டை பெருமை அடைய வைத்தது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படமும் வெளிநாடுகளில் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் உதயநிதியுடன் வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிவிட்டார். அதன் தொடர்ச்சியாக தனுஷ் தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி படத்திருக்கும் அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்ல இந்த வருட பொங்கலை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு படமும், வெளிநாட்டில் இருக்கும் இளசுகளையும் வெகுவாக கவர்ந்து நல்ல லாபம் பார்த்தது.
அது மட்டுமல்ல மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படமும் வெளிநாடுகளில் வசூலை தாறுமாறாக குவித்தது. இதன் தொடர்ச்சியாக கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் போர் தொழில். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் சூப்பர் ஹிட் கொடுத்தது.
ஆனால் போர் தொழில் படத்தின் வசூலை மிஞ்சும் அளவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் அமெரிக்காவில் தரமான சம்பவத்தை செய்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்த படம் நான்கே நாட்களில் 300 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி விட்டுள்ளது.