செல்வராகவனுக்கு தற்போது கஷ்ட காலமாக போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நானே வருவேன் திரைப்படத்தால் நொந்து போயிருந்த அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை பகாசூரன் திரைப்படம் தான். மோகன் ஜி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. அதிலும் செல்வராகவனின் நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அந்த வகையில் இனிமேல் அவர் இயக்குனராகவும், நடிகராகவும் தாக்குப் பிடிக்க மாட்டார் என்ற பேச்சுக்கள் வெளிப்படையாகவே கிளம்பியது. இதனால் துவண்டு போன செல்வராகவன் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அதில் அவர், அனுபவத்தில் சொல்கிறேன் நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது, 23 வருடங்களாக வேலையை தவிர எதைப்பற்றியும் நான் யோசித்தது கிடையாது. அதனாலேயே இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த பதிவை பார்த்த பலரும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று ஆறுதலாக கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் செல்வராகவன் இயக்குனராக வந்த ஆரம்ப காலகட்டத்தில் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு படங்களை கொடுத்தார்.
அதில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இப்போது வரை ரசிகர்களுக்கு பிடித்த படங்களாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனாலேயே அவர் தன் கவனத்தை நடிப்பின் பக்கம் திருப்பினார்.
அந்த வகையில் சாணி காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். நானே வருவேன் திரைப்படத்தில் கூட அவர் ஒரு கேமியா ரோல் செய்திருந்தார். இப்படி நடிப்பிலாவது முன்னணி இடத்தை பிடித்து விடலாம் என்று நினைத்த அவருக்கு பகாசூரன் பெரும் அடியை தான் கொடுத்தது. இவ்வாறு தோல்வி கொடுத்த பயத்தினால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் செல்வராகவன் தன் வேதனையை இப்படி ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.