துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் வெளியிட்டது.
இதனால் சந்தோஷத்தில் விக்னேஷ் சிவனும் ரெக்க கட்டி பறந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் ஜனவரி மாதம் ஏகே 62 படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் திடீரென்று அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு காரணம் அவருடைய கதையின் மீது திருப்தி இல்லாததாக தகவல் வெளிவந்தன.
ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது பற்றி தெரியவில்லை. இதை அடுத்து ஏகே 62 படத்தின் வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு சென்றது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனதை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
மேலும் ஏகே 62 கைநழுவியது என்னை பொறுத்தவரை ஏமாற்றம் தான் ஆனால் அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த படத்திற்காக நான் தயார் செய்திருந்த கதையில் இரண்டாம் பாதி தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
அதனால் தான் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டனர் என்றும் விக்னேஷ் சிவன் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்ததை உடைத்துச் சொன்னார். இந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அவர் கேரியரில் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முறையாக அமையும் என்றும் நம்புகிறேன்.
மேலும் ஏகே 62 படம் வெற்றிகரமாக முடிவடைந்து திரையிடும்போது அதை நான் அஜித் சார் ரசிகராக பார்த்து ரசிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.