அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் அஜித். இவரை இப்படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் செல்வா. தமிழில் பல படங்களை இயக்கிய இயக்குனர் செல்வா நான் அவன் இல்லை படம் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருந்தார்.
நடிகர் அஜித்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பின்னர் பல முறை அவர்கள் இணையும் வாய்ப்பு இருந்தும் அது கைகூடவே இல்லை. இந்நிலையில் நான் அவன் இல்லை படத்தின் வெற்றிக்குப் பின்னர் இருவரும் ஒரு படத்தில் இணைய இருந்தனர்.
அந்த சமயத்தில் அஜித் ரீமேக் படங்களில் ஆர்வம் காட்டி வந்த நேரம் என்பதால் எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படமான அன்பே வா படத்தை ரீமேக் செய்யலாம் என நினைத்து அந்த படத்தை இயக்க முடிவு செய்து அஜித்திடம் இயக்குனர் செல்வா கேட்டுள்ளார்.

ஆனால் அஜித் தரப்பில் அந்த முடிவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போக விரும்பவில்லை என்பதால் அந்த படம் நடக்கவில்லை என இயக்குனர் செல்வா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தற்போது தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.