ஒரு சமயத்தில் அஜித் ரசிகர்கள் அவர் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் எப்போது கிடைக்கும் என உள்ளூர் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு வந்தனர். தற்போது போதும் போதும் எனும் அளவிற்கு வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.
சமீபத்தில் வலிமை படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்ற ஆவலில் உள்ளார்கள். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன.

இந்நிலையில் வலிமை படத்திற்கு போட்டியாக களமிறங்க இருந்த ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் தற்போது வலிமை படம் எந்தவித போட்டியும் இன்றி வெற்றி கொடி நாட்ட உள்ளது. மேலும் வலிமை படம் குறித்த தேதியில் எந்தவித தடங்கலும் இன்றி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி வலிமை படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வலிமை படத்தின் தமிழ் டிரைலர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்திற்கு இதர மொழிகளில் புரமோஷன் செய்யும் விதமாக பிரபலங்கள் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி வலிமை படத்தின் தெலுங்கு போஸ்டரை பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தின் வில்லன் கார்த்திகேயாவும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதேபோல் ஹிந்தியில் வலிமை படத்தின் நாயகி ஹூமா குரேஷி அவரது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தி போஸ்டரை வெளியிட்டு புரமோஷன் செய்துள்ளார்.
