தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டெடி படம் ஓரளவிற்கு கைகொடுத்தது.
இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். படத்தில் ஆர்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவரது மார்க்கெட் சற்று உயர்ந்துள்ளது என்றும் கூறலாம்.
இந்நிலையில்தான் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படம் விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே மகிழ்ச்சியில் இருக்கும் ஆர்யாவிற்கு இந்த செய்தி மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அருள்நிதி நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் சாந்தகுமார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்த மகாமுனி படத்தை இயக்கி இருந்தார். 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம், சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் பூடானில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் 3 விருதுகளை வென்றுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்துக்கு இவ்வளவு விருதுகள் என்றால் சார்பட்டா பரம்பரை படத்திற்கு சொல்லவே வேண்டாம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.