உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அவதார் 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபீசையே மிரள விட்டது. இதற்கு முன்பு வெளியான முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. அதுவே இந்த வசூல் வேட்டைக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கான எதிர்பார்ப்பும் இப்போது அதிகரித்துள்ளது. மொத்தம் ஐந்து பாகங்களாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அடுத்த பாகம் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 13 வருட காலங்கள் ஆகிவிட்டது.
இதுவே ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை கொடுத்தது. அதனாலேயே இந்த படத்தின் இயக்குனர் மீதி மூன்று பாகங்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் அவதார் 2 திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இருந்தால் மட்டுமே அடுத்த பாகங்கள் வெளிவரும் என்ற அதிர்ச்சியையும் அவர் கொடுத்தார்.
ஒருவேளை இந்த படம் வசூல் சாதனை படைக்கவில்லை என்றால் அடுத்த பாகங்களை நான் நிச்சயம் எடுக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி அவதார் பட தீவிர ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது. இருந்தாலும் அவர் இந்த அளவுக்கு உறுதியாக பேசுகிறார் என்றால் படத்தின் தரமும் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று பேசப்பட்டது.
அந்த வகையில் அவதார் 2 திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே உலக அளவில் 12 ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்திருக்கிறது. சுமார் 4500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பல மடங்கு லாபத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருமா வராதா என்ற ஒரு சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது அவதார் 2 திரைப்படத்தின் வசூல் திருப்திகரமாக அமைந்து இருப்பதாகவும், அதனால் அடுத்த பாகங்கள் வெளிவருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அடுத்த பாகங்கள் வெளிவருவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் அடுத்த பாகம் அவதார் 2 திரைப்படத்தை விட இன்னும் பல மடங்கு மிரட்டலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி இருக்கிறது.