கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சினிமா ஹீரோயின்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனையே இருக்காது என்று பலருக்கும் தோன்றும். ஆனால் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனைகளை கடந்து வந்து சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி நிஜ வாழ்வில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை தான் மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது கோலிவுட் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக மாறியிருக்கிறார். தனுஷின் அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இவர் தற்போது அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் கிளாசிக்கல் டான்ஸர், பாடகி, தயாரிப்பாளர் என்ற பல முகங்கள் இவருக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த சமூக சேவைகளையும் இவர் செய்து வருகிறார். தன்னுடைய 17ஆவது வயதில் சினிமாவில் நடிக்க வந்த இவர் குறுகிய காலத்திலேயே மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.
ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் போதே இவர் நடிகர் திலீப்பை காதலித்து 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். அதன் பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இவர் சினிமா துறையை விட்டு காணாமல் போய்விட்டார். குடும்பம், குழந்தை, கணவர் என்று அமைதியாக வாழ்ந்து வந்த இவருக்கு நெருங்கிய தோழியின் மூலமே பிரச்சனை ஏற்பட்டது.
அதாவது இவருடைய தோழியான நடிகை காவியா மாதவன், திலீப்புடன் நெருக்கமாக பழகி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட மஞ்சு வாரியர் அதிர்ந்து போய் தன் கணவரை விட்டு பிரியும் முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் அவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். கணவரை பிரிந்ததை கூட தாங்கிக் கொண்ட மஞ்சு வாரியர் தன் மகளின் முடிவை தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார்.
இந்த தம்பதிகளின் ஒரே மகளான மீனாட்சி தன் அப்பாவுடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறியது பலருக்கும் அதிர்ச்சி தான். இது குறித்து சில சர்ச்சையான பேச்சுக்களும் எழுந்தது. ஒரு தாய் எந்த அளவுக்கு மோசமாக இருந்தால் மகள் அப்பாவிடம் வளர்கிறேன் என்று சொல்வாள் என்று பலரும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். இப்படி தன்னைச் சுற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த மஞ்சு வாரியர் How old are you என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதிலிருந்து அவர் தன் வெற்றி பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். காதலுக்காக 15 ஆண்டுகள் தன்னுடைய அடையாளத்தை மறந்து போன மஞ்சு வாரியர் தற்போது ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்து சாதித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு ரோல் மாடல் என்பதில் சந்தேகம் இல்லை.