50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.